2-ம் கட்ட காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!
ஏற்கெனவே 39 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. முன்னதாக தில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்வது குறித்து மத்திய குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தில்லியில் நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் கமல்நாத், அசோக் கெலாட் ஆகியோரின் மகன்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.43 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில், பட்டியலினப் பிரிவில் 19 பேருக்கும், பழங்குடியினப் பிரிவில் 9 பேருக்கும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 13 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 43 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலின்படி, காங்கிரஸ் எம்.பி.கெளரவ் கோகோய் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் தொகுதியிலும், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத்தின் மகன் நகுல்நாத் மத்தியப் பிரதேசத்தின் சிந்திவாரா தொகுதியில் போட்டியிடுகின்றனர். அசோக் கெலாட்டின் மகன் வைபர் கெலாட் ஜல்லூர் (ராஜஸ்தான்) தொகுதியில் போட்டியிருகிறார்.
இந்தப் பட்டியலில் உள்ள 43 வேட்பாளர்களில் 10 பேர் பொது வேட்பாளர்கள், 13 ஓபிசி வேட்பாளர்கள், 10 பேர் பட்டியலின வேட்பாளர்கள், 9 பழங்குடியின வேட்பாளர்கள் மற்றும் ஒரு முஸ்லிம் வேட்பாளர் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸின் இரண்டாவது பட்டியலில் சச்சின் பைலட்டின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, காங்கிரஸ் முதற்கட்டமாக 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.