1. Home
  2. தமிழ்நாடு

அமெரிக்காவில் உருவானது 2வது பெரிய இந்துக்கோயில்!

1

கம்போடியாவில் அமைந்திருக்கும் அங்கூர்வாட் விஷ்ணு கோயில் சுமார் 402 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில் என்னும் பெருமையை உடையது.இரண்டாவது பெரிய இந்துக் கோயிலாக 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஶ்ரீரங்கம் அரங்கநாதன் கோயில் திகழ்ந்தது. தற்போது அந்தப் பெருமையை அமெரிக்காவில் அமைந்துள்ள நியூஜெர்சி அக்‌ஷர்தாம் கோயில் தட்டிச் செல்கிறது. சுமார் 183 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயில் 'பாப்ஸ்' என்கிற ஆன்மிக அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது.

பாப்ஸ் (BAPS) என்று அழைக்கப்படும் போச்சாசன்வாசி ஶ்ரீ அக்‌ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா என்கிற அமைப்பு அமெரிக்காவில் ட்ரென்டன் மாநகரின் அருகில் மிகப்பெரிய கோயில் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

பாப்ஸ் சுவாமி நாராயண் அக்‌ஷர்தாம் கோயில் வளாகம் 183 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது நியூயார்க் நகரில் அமைந்துள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தைப்போல நான்கு மடங்கு பெரியது. பளிங்குக் கற்கள் கொண்டு எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தில் 10 ஆயிரம் சிலைகள் உள்ளன.

1

இந்த வளாகத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன. இதன் கட்டுமானத்துக்காக உலகெங்கிலும் இருந்து 2 மில்லியன் கன அடி உயர் ரகப் பளிங்குக் கற்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தியச் சிற்பிகள் அவற்றைக் கலைநயத்துடன் சிற்பங்களாக தூண்களாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இவற்றில் பிரதான கோயில் ஒன்றின் கோபுரம் 191 அடி உயரத்தில் கற்கள் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயில் உருவாக்கத்தில் சுமார் 13 ஆயிரம் பணியாளர்கள் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் கடின உழைப்பில் உருவான இந்த ஆலயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் - 8) அன்று தொடக்க விழா கண்டது. 

Trending News

Latest News

You May Like