ஜி20 மாநாட்டுக்காக ரூ.10 கோடி மதிப்பில் 28 அடி உயர நடராஜர் சிலை..!

ஜி20 அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமையேற்றுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் அந்த அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மாநாட்டு அரங்கின் முகப்புப் பகுதியில் பிரம்மாண்ட நடராஜர் சிலையை அமைக்க, மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் முடிவு செய்தது.இந்தச் சிலையை உருவாக்கும் பணி தமிழகத்தின் சுவாமிமலையில் உள்ள தேவ சேனாதிபதி சிற்பக் கூடத்துக்கு வழங்கப்பட்டது.
சிலை தயாரானதை அடுத்து வெள்ளிக்கிழமை அதை டெல்லிக்குக் கொண்டு சென்றனர். ஐந்து பொக்லைன் இயந்திரங்களின் துணையோடு பிரம்மாண்ட நடராஜர் சிலை லாரியில் ஏற்றப்பட்டது. வரும் 28ஆம் தேதி இச்சிலை டெல்லி சென்றடையும்.
முன்னதாக, சுவாமிமலையிலிருந்து புறப்பட்ட நடராஜர் சிலையை அப்பகுதி மக்கள் மலர்கள் தூவி வணங்கினர். 28 அடி உயரம், 21 அடி அகலம், 25 டன் எடை கொண்ட இச்சிலையின் மதிப்பு ரூ.10 கோடியாகும்.