சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம்..!
தமிழக அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுத்தத் தவறிய தமிழக அரசு மீது தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்” என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், அரசு அதிகாரிகள், ஆயுதப்படை ஊழியர்கள் உள்ளிட்ட 260 பேருக்கும் மேற்பட்டோர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
இது குறித்து சுப்ரீம் கோர்ட் தமைமை நீதிபதி சந்திர சூட்டுக்கு எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், "பொதுவெளியில் சனாதன தர்மம் பற்றிய அவதூறாக பேசியது வெறுப்பு பேச்சுக்கு சமம். எந்த வகையான வெறுப்பு பேச்சுக்கு எதிராக புகார் வரும் வரை காத்திருக்காமல் மாநில அரசு தாமாக முன்வந்து வழக்குப் பதியலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
உதயநிதி வெறுப்பு பேச்சு பேசியது மட்டுமல்லாமல், அதற்காக மன்னிப்பு கேட்கவும் மறுத்துள்ளார். அத்துடன் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தைக் கூறி, அதைத் தொடர்ந்து கூறுவேன் என்று தன்னை நியாயப்படுத்தியுள்ளார். மக்களின் வருத்தங்கள், கவலைகளை பற்றி யோசிக்காமல் சற்றும் பொருத்தமில்லாத விளக்கங்களை வழங்கியுள்ளார்.
அவரது பேச்சு பெரும்பாலான மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு என்பதில் சந்தேகமில்லை. இது இந்தியாவை சமய சார்பற்ற நாடாக கருதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு செயல்பட மறுப்பது சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்கும் செயலாகும்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி, ‘டெங்கு, மலேரியா மற்றும் கொரோனாவை போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது’ எனக் கூறி இருந்தார்.