இன்று கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் 25000 பேருக்கு அன்னதானம்..!
இன்று மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகின்றது.
நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கேப்டன் விஜயகாந்த மறையும்போது தலைவராகவும் வரலாறாகவும் மாறிப்போனார். அவரது மறைவுக்கு கட்சி பேதமின்றி, சாதி பேதமின்றி, மத பேத மக்கள் லட்சக்கணக்கில் குவிந்து அஞ்சலி செலுத்தினர். யாருமே நினைத்துப் பார்க்காத அளவுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தலைநகர் சென்னையை நோக்கி படையெடுத்தனர்.
நடிகர், நடிகர் சங்கத் தலைவர், தேமுதிக கட்சித் தலைவர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் என தான் கால் பதித்த இடங்களில் எல்லாம், வேரூன்றி நின்றவர் கேப்டன். தமிழ்த் திரைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு, இலை போட்டு உணவு பரிமாறிமாறும் முறையை அறிமுகப்படுத்தியவர் கேப்டன் தான். ஒருவேளை சாப்பாட்டிற்காக யாரும் ஏங்கிவிடக்கூடாது என தனது படங்களின் படப்பிடிப்புத் தளங்கள், தனது இல்லங்கள், அலுவலகம் என அனைத்து இடங்களிலும் தனது சொந்த செலவில் உணவு போட்டவர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு ஆகிறது.இந்நிலையில் இன்று முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது.
தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதா தலைமையில் இன்று காலை 8.30 மணி அளவில் கோயம்பேடு மேம்பாலத்தை ஒட்டியுள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அருகில் இருந்து அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தே.மு.தி.க. நிர்வாகிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.
தே.மு.தி.க. அலுவல கத்தை ஊர்வலம் வந்தடைந்ததும் அங்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்கிறார்கள்.
மறைந்த தே.மு.தி.க. தலைவரான கேப்டன் விஜயகாந்த் எங்கள் அனைவருக்கும் குருவாக திகழ்ந்தவர். இதன்படி அவரது நினைவு நாளை குரு பூஜை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளை குரு பூஜை தினமாக கடைபிடிக்க முடிவு செய்துள்ளோம். இந்த ஆண்டு முதலாம் ஆண்டு குரு பூஜை நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி விஜயகாந்த் கேப்டன் ஆலயத்துக்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. 25 ஆயிரம் பேர் சாப்பிடும் அளவுக்கு நாளை அன்னதானம் நடைபெறுகிறது.
இவ்வாறு எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.
இன்று நடைபெற உள்ள விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குரு பூஜையையொட்டி அவரது நினைவிடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்களை பாதுகாப்புக்காக நிறுத்தி வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.