தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 25,000 பேர் இன்றுடன் ஓய்வு!!
தமிழகத்தில் 60 வயது பூர்த்தியான ஆசிரியர்கள் உட்பட 25,000 அரசு ஊழியர்கள் இன்று பணி ஓய்வு பெறுகின்றனர்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதாக 58 இருந்து வந்தது. பின்னர் கொரோனா தொற்று பரவத்தொடங்கியதையடுத்து முழு ஊரங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அரசின் வருவாய் குறைந்தது.
அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை கொடுப்பதற்கு நிதி இல்லாத சூழல் அரசுக்கு ஏற்பட்டது. எனவே, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான வயது 58ல் இருந்து 59 ஆக கடந்த 2020 மே மாதம் உயர்த்தப்பட்டது. பின்னர், இது 60 வயதாக உயர்த்தப்பட்டது.
ஓய்வுபெறுபவர்களின் வயது உயர்த்தப்பட்டதால் புதிதாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தடைபட்டது. அரசின் இந்த முடிவு விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், 60வயது பூர்த்தியான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் 25 ஆயிரம் பேர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர்.
இதில் ஆசிரியர்கள் 2,000 பேர், அரசு பணியாளர்கள் 23,000 பேர் ஆவர். இதன் மூலம் காலியாக உள்ள அரசு பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தில் அரசு துறைகளில், 14 லட்சம் முதல் 15 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றார்.
ஆனால், ஒன்பது லட்சம் பேர் தான் பணியில் உள்ளனர். நிறைய இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப போதுமான நிதி இல்லை என்று கூறியிருந்தார். அவரது கூற்றுப்படி தற்போது தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் மேலான பணியிடங்கள் காலியாக உள்ளன.
newstm.in