1. Home
  2. தமிழ்நாடு

2.5 டி.ம்.சி. நீரை திறக்க வேண்டும் : கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு..!

1

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று கூடியது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கடந்த 16ம் தேதி வினீத் குப்தா தலைமையில் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 2.5 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், பட்டாபிராமன் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே-ல் கர்நாடகம் தர வேண்டிய 2.5 டி.எம்.சி. காவிரி நீரை முழுமையாக திறந்து விட தமிழ்நாடு வலியுறுத்தியது. 

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 5 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். 2 மாதங்களிலும் 1.5 டி.எம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. நிலுவையில் உள்ள 3.5 டி.எம்.சி நீர், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான நீரையும் திறக்க உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை அடிப்படையில் கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like