25 அடி உயர கட்அவுட் ஆட்டோ மீது சரிந்து விழுந்து விபத்து..!

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில் இன்று( மார்ச் 12) கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட திமுக நிர்வாகிகள் செய்துள்ளனர்.
கூட்டத்துக்கு வரும் ஸ்டாலின், உதயநிதியை வரவேற்கும் விதமாக, திருவள்ளூர் மாவட்ட எல்லையான அரண்வாயல் முதல் கூட்டம் நடக்கும் திருப்பாச்சூர் வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இரு புறமும் கம்பங்களை நட்டு தி.மு.க., கொடியை நிர்வாகிகள் கட்டி வருகின்றனர். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருப்பாச்சூர் வரை 25 அடி உயரத்தில் 5 ராட்சத கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று பலத்த காற்று மழை பெய்தது. அப்போது, அந்த வழியாக சென்ற ஆட்டோ மீது, துணை முதல்வர் உதயநிதி படத்துடன் வைக்கப்பட்ட 25 அடி உயர கட்அவுட் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் ஆட்டோ ஓட்டுனர் லேசான காயம் ஏற்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளன.