செம அறிவிப்பு : 25 அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்படும்..!

2025 - 2026 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மூத்த குடி மக்களுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மானிட வாழ்வின் தவிர்க்க இயலாத கட்டமான முதுமையில், மூத்த குடிமக்கள் தனிமை, மருத்துவ நலன் மற்றும் பொருளாதார சார்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடுவதை தடுக்கும் வகையில் அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்பிற்கு என மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 25 அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகல் நேர பாதுகாப்பு மையங்களில் முதியவர்கள் தோழமை உணர்வுடனும் பயனுள்ள பணிகளிலும் ஈடுபடலாம் என்றும் பகல் நேர பராமரிப்பு, உதவி, அத்தியாவசிய மருத்துவ பராமரிப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் துணையுடன் இந்த அன்புச் சோலைகள் வழங்கும் என்றும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.