சவுக்கு சங்கரை வரும் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு!!
யூடியூபர் சவுக்கு சங்கரை வரும் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் மற்றும் நீதிபதி குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து சவுக்கு சங்கர் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்து செப்டம்பர் 15ஆம் தேதி அவருக்கு 6 மாத கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் அளித்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய 6 மாத கால சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள 4 வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த கைது தொடர்பான ஆவணங்களை சிறைத்துறை அதிகாரிகளிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கொடுத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரை முறையாக கைது காட்டுவதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த எழும்பூர் 5 வது நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் ஜகதீசன் வருகின்ற 25ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை கடலூர் சிறையில், நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து சவுக்கு சங்கரை கடலூர் சிறையில் அடைக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைத்து சென்றனர்.
newstm.in