வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரூ.2.5 கோடி தங்க நகைகள்!!
சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியது. இதில் நகரமே வெள்ளக்காடாக மாறியது. சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.
கனமழை மற்றம் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், அதற்குள் சென்ற காரில் இருந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் தாழ்வான இடத்தில் இருந்த நகைக் கடைக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதில் கடையின் தரைத்தளத்தில் இருந்த சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
வெள்ளத்தின் வேகத்தில் நகைகள் அடித்துச் செல்லப்பட்ட போது, கடையின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களால் எதுவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடையில் இருந்த 80 சதவீத நகைகள் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டதாக கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.
நகைகளை மீட்பது தொடர்பாக மாநகராட்சியிடம் நகைக்கடை உரிமையாளர் உதவி கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in