கேரளாவில் இறந்து போன 24 வயது இளைஞருக்கு நிபா வைரஸ்..!
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெங்களூருவில் படித்து வருகிறார். அண்மையில் அவர் தமது சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார். அடுத்த சில நாட்களில் தொடர்ந்து காய்ச்சல் இருக்கவே உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் இளைஞர் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து சோதனை முடிவுகளிலும் இளைஞர் நிபா வைரசால் பலியானது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், அவசர உயர் மட்டக்குழு கூட்டத்தை கூட்டி உள்ளார். அதிகாரிகளுடன் ஆலோசித்த அவர், நிபா வைரஸ் தாக்குதல் முன் எச்சரிக்கை மற்றும் சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறி உள்ளதாவது; பலியான இளைஞருடன் தொடர்பில் இருந்து 154 பேர் யார் என்ற பட்டியல் சேகரிக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவுடன் மொத்தம் 4 மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றிருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
இதுதவிர, அந்த இளைஞர் நண்பர்கள் பலருடன் சில இடங்களுக்கு சென்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 பேருக்கு அறிகுறிகள் இருப்பதால், அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளோம். யாருக்கேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு நிபா வைரஸ் அறிகுறிகள் இருப்பது போன்று சந்தேகம் எழுந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை நாட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறி உள்ளார்.