1. Home
  2. தமிழ்நாடு

அதிவேகமாக பறந்த 242 பைக்குகள் பறிமுதல்! சாலை விபத்துகளில் ஐவர் பலி..!

Q

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர். இதில் குறிப்பாக கிண்டி, அடையாறு, தரமணி, துரைப்பாக்கம், இசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலைகளில் பைக் பந்தயங்கள் நடக்கக்கூடும் என்பதால் போக்குவரத்து போலீசார் 30 கண்காணிப்பு சோதனைக்குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.
அதேபோல் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், தியாகராய நகர், அடையாறு, புனித தோமையார் மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணா நகர், கோயம்பேடு, கொளத்தூர், பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட காவல் மாவட்டங்களில் உள்ள 425 இடங்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததாகவும், அதிக ஒலி எழுப்பும் வகையில் ஓட்டி வந்ததாகவும், பைக் ரேஸில் ஈடுபட்டதாகவும் சுமார் 242 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், புத்தாண்டு தினம் என்பதால் பிடிபட்ட வாகன உரிமையாளர்களிடம் அபராதம் விதிக்காமலும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமலும் எச்சரிக்கை செய்யப்பட்டு இருசக்கர வாகன ஓட்டிகளின் பெற்றோர்களை வரவழைத்து கடிதங்களை எழுதி வாங்கிக்கொண்டு வாகனங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் அருகே அதிகாலை அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த கண்டைனர் லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியின் மாணவர் சார்கேஷ் (19) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் பைக்கில் வந்த சஞ்சய் (19) என்ற இளைஞர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
மேலும் சித்தாலப்பாக்கம் அடுத்த நூக்கம்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே நூக்கம்பாளையம் பெரியபாளையத்தம்மன் தெருவை சேர்ந்த நித்திஷ் (19) என்பவர், நள்ளிரவில் கேடிஎம் பைக்கில் சென்ற போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்ததில் நித்திஷ் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளார்.
அதேபோல் பள்ளிக்கரணை பழைய காவல் நிலையம் அருகே இன்று தேவாலயம் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (59) என்ற நபர் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஓஎம்ஆர் சாலை சிறுசேரி பகுதியில் நேற்று நள்ளிரவில் திவ்யன்சு குமார் (16) என்ற வடமாநில சிறுவன் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற போது திடீர் என எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இருந்துள்ளார்.
இந்த விபத்துகள் குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் மூவரின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று, சென்னை சேத்துப்பட்டு கெங்குரெட்டி சுரங்க பாதையில் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் இருவர் சென்றனர். அப்போது காரை முந்தி சொல்லும் முயன்றபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி கீழே விழுந்த இருவரில் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில் இருசக்கரத்தில் வந்தவர்கள் நேபாளம் மாநிலத்தை சேர்ந்த தீபக் மற்றும் பாபு என்பது தெரிய வந்தது. மேலும் இருவரும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக மதுபோதையில் வாகனத்தை அதிவேகமாக இயக்கி காரை முந்தி செல்ல முயன்று நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தீபக் என்பவர் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்பது போலீசார் விசாரணை தெரிய வந்துள்ளது.

Trending News

Latest News

You May Like