1. Home
  2. தமிழ்நாடு

நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 24 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை..!

Q

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற ஐதீகம் மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று காலை 6.33 மணிக்கு தொடங்கி இன்று (11-ம் தேதி) அதிகாலை 4.56 மணி வரை நீடித்தது.
எனவே, வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்தன. அத்துடன், புதியபுதிய டிசைன்களில் நகைகளும்அறிமுகப்படுத்தப்பட்டன.
அட்சய திருதியை முன்னிட்டு, சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6 மணிக்கே நகைக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னையில் மட்டும் 5 ஆயிரம் நகைக் கடைகள் உள்ளன.
பொதுமக்கள் சிலர் வெயிலுக்கு அஞ்சி காலையிலேயே நகை வாங்க கடைகளில் குவிந்தனர். சிலர் வெயிலையும் பொருட்படுத்தாமல் மதிய வேளைகளிலும் நகைக் கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால், கடைகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. நகைக் கடையினர் பழரசம், மோர், தர்பூசணிஉள்ளிட்டவை வழங்கி வாடிக்கையாளர்களை வரவேற்றனர்.
அட்சய திருதியை முன்னிட்டு தங்க நாணயங்கள் வாங்க வந்தவர்களுக்கு சிறப்புக் கவுன்ட்டர் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
மேலும் அட்சய திருதியை தினத்தன்று ஒரேநாளில் தங்கம் விலை 3 முறை உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதன்படி, நேற்று காலை 6 மணிக்கு தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,660-க்கு விற்பனையானது. பின்னர், காலை 8 மணிக்கு தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.6,705-க்கு விற்பனையானது. இதற்கிடையே, பிற்பகல் மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது.
இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.6,770-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.1,240 அதிகரித்து ரூ.54,160-க்கு விற்பனையானது. இதேபோல் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.90-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.90,000-ஆக இருந்தது
இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது:
சர்வதேச தங்க சந்தையில் விற்கப்படும் தங்கத்தின் விலைக்குஏற்ப உள்நாட்டில் தங்கம் விலைநிர்ணயிக்கப்படும். இதன்படி, தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும். இந்நிலையில், அட்சய திருதியை முன்னிட்டு காலை 6 மணிக்கே கடைகள் திறக்கப்பட்டதால், சர்வதேச தங்க சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றத்துக்கு ஏற்ப கூடுதலாக 6 மணிக்கே ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், வழக்கம் போல இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அட்சய திருதி நாளான்று 20 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானது. இந்த ஆண்டு 24 ஆயிரம் கிலோவாக அதிகரித்து விற்பனையானது. சில கடைகள் அட்சய திருதியை சலுகையை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு நீட்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like