1. Home
  2. தமிழ்நாடு

நீங்காத வடுவான கும்பகோணம் பள்ளி தீ விபத்து: இன்று 21ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

1

 கும்பகோணத்தில், காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் துவக்கப் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் 21ம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 16) அனுசரிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் துவக்கப் பள்ளியில், கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். உலகையே உலுக்கிய இந்தச் சம்பவம் பலரையும் கலங்கடித்ததுடன், இன்று வரை மட்டுமல்ல என்றுமே அனைவர் மனதிலும் நீங்கா வடுவாக இருக்கும்.

இதன் 21-ம் ஆண்டு நினைவு தினமான இன்று தீயின் கோர தாண்டவத்துக்கு குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இன்று தங்கள் வீடுகளில் தீ விபத்தில் இறந்த தங்கள் குழந்தைகளின் போட்டோக்களுக்கு மாலையிட்டதுடன், பிடித்தமான உணவு உள்ளிட்ட பொருள்களைப் படையலிட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் தீ விபத்து ஏற்பட்ட பள்ளிக்கு முன் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த 94 குழந்தைகளின் புகைப்படங்கள் மீது மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர். பள்ளியின் முன் திரண்டு கதறியபடி குழந்தைகளின் போட்டோக்கள் மீது மலர் தூவி அஞ்சலி செலுத்தியது அனைவரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. 

பல தன்னார்வ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக பிடித்த உணவுப் பொருட்களை படைத்து, மலர் தூவி அவர்களின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர். இந்த துயர சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் ஆகினும், பிஞ்சு குழந்தைகளை இழந்த தாக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்தியிலிருந்து இன்னும் நீங்காத வடுவாக மாறிவிட்டது.

Trending News

Latest News

You May Like