மணிப்பூர் நிலைமை மோசமாகி வருவதாக 21 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வேதனை..!
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி - குகி இனத்தவர் இடையேயான கலவரத்தில் இதுவரை 182 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் குகி பழங்குடியின பெண்கள் இருவர் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மணிப்பூர் மாநில நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்ய பாராளுமன்றத்தின் இருஅவைகளைச் சேர்ந்த 21 உறுப்பினர்கள் அடங்கிய குழு டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் மணிப்பூர் சென்றது.
இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக இந்தக் குழு மாநில கவர்னர் அனுசுயாவை ராஜ்பவனில் சந்தித்தது. அப்போது அந்தக் குழு கவர்னரிடம் ஒரு மனுவை ஒப்படைத்தது. அதில் கடந்த மே 3-ம் தேதி முதல் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துமாறு கூறப்பட்டிருந்தது.
கவர்னரை சந்தித்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், கவர்னரை சந்தித்து மனு வழங்கியுள்ளோம். அவர் எங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கொண்டார். மணிப்பூரின் அனைத்து இனக் குழுத் தலைவர்களையும் அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்து அமைதியை நிலைநாட்ட முயற்சிக்குமாறு ஆலோசனை வழங்கினார். மணிப்பூர் நிலைமை தனக்கு வேதனை அளிப்பதாகக் கூறினார். நாங்கள் கண்ட துக்கமான காட்சிகளை விவரித்தோம் அவரும் எங்கள் கருத்துகளை ஒப்புக் கொண்டு அனைத்து இனக்குழு தலைவர்களையும் சந்திக்குமாறு அறிவுத்தினார்.
மணிப்பூர் விவகாரத்தில் நாங்கள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு விவாதத்துக்கு வர வேண்டுமென மத்திய அரசுக்கு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். மணிப்பூரில் நிலைமை மோசமாகி வருகிறது. இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் என்றார்.
இந்தக் குழுவில் காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, கவுரவ் கோகாய், கே.சுரேஷ் மற்றும் புலோ தேவி நேதம், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ராஜிவ் ரஞ்சன், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமார், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரஹிம். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மனோஜ் குமார், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஜாவேத் அலி கான், ஜார்க்கண்ட் முக்கி மோர்சா கட்சியைச் சேர்ந்த மகுவா மாஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது பைசல், ஐக்கிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அனில் பிரசாத் ஹெக்டே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த முகமது பஷீர், ஆர்எஸ்பி கட்சியைச் சேர்ந்த பிரேமசந்திரன், ஆம் ஆத்மியைச் சேர்ந்த சுஷில் குப்தா, சிவசேனா உத்தவ் அணியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன், ரவிக்குமார், ஆர்.எல்.டி. கட்சியை சேர்ந்த ஜெயந்த் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.