2023-இல் வீறுநடை போடுவோம்..!! புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!!
பிறந்தாச்சு 2023. , தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்தில், “அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்! புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக! இணையற்ற இளைய ஆற்றல் வெல்க!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சுதந்திரம், சமத்துவம் & சகோதரத்துவம் பாதுகாக்கப்படுவதற்கு சனநாயக சக்திகளை அய்க்கியப்படுத்துவோம்! சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம்! இதனை புத்தாண்டு உறுதிமொழியாக ஏற்போம்! யாவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மலரும் புத்தாண்டில் அன்பும் அமைதியும் நிலைத்து அகத்தை சூழ்ந்திருக்கும் தீய எண்ணங்கள் நீங்கி, அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் இறைவனின் அருளோடு நீங்காத வளமும் நிறைவான நலமும் பெற்று உற்சாகமாக வாழ எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்ட வாழ்த்து செய்தியில், புலரும் புத்தாண்டு,நிறைந்த நம்பிக்கை,வளம்,ஆரோக்கியம்,மிகுந்த சந்தோஷம்,வெற்றி இவை அனைத்தையும் மக்களுக்கு வழங்கட்டும் என எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டி கேட்டு கொள்கிறேன்,அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் என வாழ்த்துக்களை கூறியுள்ளார்.