200 ஆண்டு பழமையான குறிச்சி கூத்தாண்டவர் திருவிழா தொடக்கம்..!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குறிச்சி கிராமத்தில், 200 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும், சுற்றுப்புற கிராம மக்களின் காவல் தெய்வமான கூத்தாண்டவரின் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பிரமாண்டமான ‘தலை’ உருவம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில் சாமிக்கு முழு உருவ சிலை சிற்பம் இல்லை.
இந்த கூத்தாண்டவர் கோவிலுக்குச் சென்று சாமியின் தலையை பக்தர்கள் வழிபடுவதில்லை. பூசாரி மட்டுமே மாதத்திற்கு ஒரு முறை கோவிலுக்கு சென்று கூத்தாண்டவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார். குறிச்சி கிராம மக்கள் ஒன்று கூடி, கூத்தாண்டவருக்கு திருவிழா எடுக்கும் தருணத்தில், கூத்தாண்டவர் சாமி புஷ்ப ரதத்தில் திருவீதி விழா வரும்போது தான், சாமியின் தலையை பக்தர்கள் வணங்கி வழிபாடு செய்ய முடியும்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் 10-ல் குறிச்சி கூத்தாண்டவர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கோவிலில் இருந்து கூத்தாண்டவர் சாமி ‘தலை’ திருவீதி உலா வருகை எதிர்பார்த்து, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குறிச்சி கிராம வீதிகளில் காத்திருந்தனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப ரதத்தில் திருவீதி உலா வந்த கூத்தாண்டவர் சாமியின் பிரமாண்டமான தலையை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியோடு வழிபாடு நடத்தினர்.
கூத்தாண்டவர் திருவீதி உலா உற்சவம் நிறைவடைந்து, சிலையை கோவிலில் மீண்டும் இறக்கி வைத்ததும், குறிச்சி கிராமத்தில் திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால், குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், பக்தர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.