இந்தாண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு..!
கோயில்களில் கட்டணச் சீட்டு மையங்களில் கூட்டத்தினை தவிர்க்கவும், பக்தர்கள் எளிய முறையில் டெபிட் கார்டு மற்றும் கிரிடிட் கார்டு மூலமாக கட்டணச் சீட்டு பெறும் வகையில் 260 திருக்கோயில்களுக்கு 315 பிஓஎஸ் கருவிகளை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "கடந்தாண்டு 550 திருக்கோயில்களுக்கு 1,700 கையடக்க கட்டணக் கருவிகளை வழங்கினோம். அதன்மூலம் ரூ.210 கோடி கட்டணங்களாக கிடைக்கப்பெற்றுள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக இருப்பதால் அதனை விரிவுப்படுத்திடும் வகையில் தற்போது 260 திருக்கோயில்களுக்கு 315 கையடக்க கட்டணக் கருவிகள் வழங்கியுள்ளோம். இதன்மூலம் திருக்கோயில்களில் கட்டணச் சீட்டு பெறுவதற்கும் நன்கொடைகள் வழங்குவதற்கும் பக்தர்களுக்கு சுலபமாக இருக்கும். திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 திருக்கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 2024ம் ஆண்டு இறுதிக்குள் 2,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திடும் வகையில் செயலாற்றி கொண்டிருக்கிறோம்.
மன்னர்களாலும், மூதாதையர்களாலும் கட்டப்பட்ட 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான திருக்கோயில்களாக 717 திருக்கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாத்து புனரமைக்க அரசு மானியமாக ரூ.200 கோடியும், உபயதாரர்கள் ரூ.130 கோடியும் வழங்கி இருக்கின்றார்கள். இதன்மூலம் 100 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆண்டில் 80 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கும் பணிகளும், நிலங்களை அளவீடு செய்து காக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை ரூ.5,558 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டிருப்பதோடு, 1.55 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளன என கூறினார்.