ரூ. 2000 நோட்டுகளை மாற்ற ஆவணம் ஏதும் தேவையா ?
செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டும் என்று பாரத ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை நாளை 23-ம் தேதி செவ்வாய்க் கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்வதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் ஒரு நபர் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ அடையாள ஆவணம் தரவோ வேண்டியதில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி நோட்டுக்களை மாற்றுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.