முட்டை வியாபாரிகளுக்கு இடியாய் வந்து இறங்கிய அமெரிக்கா வரி விதிப்பு : நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்..!
இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால், அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி சுணக்கம் அடைந்தது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக 20 கோடி முட்டைகள் நாமக்கல் சந்தையில் தேங்கி இருப்பதாக முட்டை வியாபாரிகள் வருத்தம் தெரிவித்து இருக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் தான் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு ஒரு கோடியே 20 லட்சம் முட்டைகள் நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை படைத்தது.
ஆனால் அடுத்த சில நாட்களிலேயே முட்டைகள் தேக்கமடைந்து இருப்பது வியாபாரிகளை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. பொதுவாகவே நாமக்கல் முட்டைக்கு அமெரிக்காவில் கடும் கிராக்கி இருக்கிறது. ஆனால் டிம்பின் வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக முட்டைகள் தேக்கமடைந்து அழுகும் நிலை ஏற்பட்டு இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்க தலைவர் வாங்கிலி சுப்பிரமணியன் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் தான் அமெரிக்காவுக்கு ஒரு கோடியை 20 லட்சம் முட்டைகளை ஏற்றுமதி செய்து சாதனை படைத்ததாக நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஆனால் தற்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. ஒரு கோடியே 20 லட்சம் முட்டைகள் என்பது எங்களை பொருத்தமட்டில் சாதாரண எண்ணிக்கை தான்.ஆனாலும் இதனால் ஏற்படும் இழப்பு மிகப்பெரியது. எனவே இந்த முட்டைகளை உள்நாட்டிலேயே விற்பனை செய்வதற்கு முயற்சி எடுப்போம் என கூறினார்.
தமிழகத்தில் முட்டைக்கு பெயர் பெற்ற நாமக்கலில் நாளொன்றுக்கு 7 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. இதில் பெரும்பாலான முட்டைகள் தமிழகத்துக்கு உள்ளேயே சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இது போல பிற மாநிலங்களுக்கும் நாமக்கல் முட்டை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.