செல்ஃபி மோகத்தால் பறிபோன +2 மாணவனின் உயிர்..!!
மதுரை கூடல்புதூர் முல்லை நகரில் வசித்து வருபவர் பழனி. ஐஸ் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு விக்னேஷ்வர் (17) என்ற மகன் உள்ளான். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் விக்னேஸ்வர் தனது 3 நண்பர்களுடன் கூடல்நகர் குட்ஷெட் பகுதிக்கு வந்தார்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிகளில் ஏறி 4 பேரும் விளையாடி கொண்டிருந்தனர். மேலும் செல்போனில் போட்டோ எடுத்தப்படி இருந்தனர். அப்போது விக்னேஷ்வர் ரயில் பெட்டியின் மேலே ஏறினார். அந்த பெட்டியின் மேல்பகுதியில் 25 ஆயிரம் வோல்டு மின்சாரம் பாயும் மின் கம்பி இருந்தது. அதை பற்றி சிந்திக்காமல் ரயில் பெட்டியின் மேல்பகுதியில் ஏறிய விக்னேஷ்வரை மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை ரயில்வே போலீசார் விக்னேஷ்வரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் மாணவன் விக்னேஷ்வர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், மதுரை கோட்டத்தில் பெரும்பாலான ரயில் பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளன. அவற்றில் ரயில் இயக்குவதற்காக 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. இது பற்றிய எச்சரிக்கை விளம்பரங்கள் ரயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படும் 230 வோல்ட் மின்சாரம் தாக்குதலையே நம்மால் தாங்க முடியாது. அப்படி இருக்கும்போது 25 ஆயிரம் வோல்டு மின் தாக்குதல் பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
எனவே பொதுமக்கள் மின் ரயில் பாதையை நெருங்கி ஆபத்தை தேடிக் கொள்ள வேண்டாம் என்று கூறினார்.