ஊழியர்களின் அஜாக்கிரதையால் வெவ்வேறு இடத்தில் பறிபோன 2 உயிர்கள்..!
திருவாரூர் அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த அரசு ஊழியர் குமார் என்பவர் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த கம்பிகள் குத்தி குமார் உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் , சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் திருவாரூரில் சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து அரசு ஊழியர் குமார் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜாக்கிரதையாக பணிகளை மேற்கொண்டதாக கூறி ஒப்பந்த நிறுவனம் மேலாளர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல், சென்னை பூந்தமல்லியில் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் மழை நீர் வடிகால் மற்றும் மின்வாரியம் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு உயிரழுத்த கேபிள் இணைப்பு தடம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நெடுஞ்சாலை வழியாக ராமகுணா மற்றும் மதிவாணன் என்று இரண்டு இளைஞர்கள் வேலை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இந்த பகுதியில் சாலையில் மின்விளக்கு எரியாததால் இருட்டாக இருந்ததன் காரணமாக இரவு பணிக்கு சென்று இளைஞர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கினர். இதில் தலையில் கம்பிகளில் குத்திய நிலையில் ராமகுணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அத்துடன் அவரது நண்பன் மதிவாணன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பூவிருந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நெடுஞ்சாலையில் பணிகள் நடைபெறும் பகுதியில் விளக்குகள் இல்லாததுதான் விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய வாரியம் விளக்கம் அளித்துள்ளது. பூந்தமல்லி அருகே தடுப்புகள் அமைத்து மின்வாரியம் சார்பில் புதைவிட பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் , பள்ளம் தோண்டி பணிகள் நடைபெறுவதை எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தும் விபத்தில் சிக்கினர். விபத்தில் சிக்கிய இளைஞர்கள் மது அருந்தி இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது