1. Home
  2. தமிழ்நாடு

2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்..!

1

பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம் சார்பில் 2025-ஆம் ஆண்டில், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடத் திட்டமிட்டப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று (20/07/2025), தொண்டாமுத்தூர் ராஜலக்ஷ்மி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மரம் சார்ந்த விவசாய முறையை முன்னெடுப்பதன் மூலம், தொண்டாமுத்தூர் பகுதியில் 33 சதவீத பசுமை பரப்பை உருவாக்குதல், விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துதல் மற்றும் நொய்யல் ஆற்றுக்கு புத்துயிர் அளித்தல் ஆகிய உயர்வான நோக்கங்களுடன் 'பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்' தொடங்கப்பட்டது.

இதன்படி காவேரி கூக்குரல் இயக்கத்துடன், தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம், கோவை கட்டிட கலைஞர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம், தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் - கோவை மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு விலை உயர்ந்த டிம்பர் மரக்கன்றுகளை வழங்கி வருகின்றன. 

இவ்வியக்கம் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் இந்தாண்டு பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் விவசாயிகளுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான டிம்பர் மரக் கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. காவேரி கூக்குரல் இயக்கத்துடன் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம், ரோட்டரி சங்கம் - டி'எலைட், நொய்யல் ஆறு அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைத்து இதனை செயல்படுத்த உள்ளன. 

பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு தேக்கு, மஹோகனி, வேம்பு, செம்மரம், சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த டிம்பர் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியில் காவேரி கூக்குரல் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், ரோட்டரி சங்க தலைவர்கள் - பிரதிநிதிகள், நொய்யல் ஆறு அறக்கட்டளை செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

Trending News

Latest News

You May Like