சென்னையில் பெய்த கனமழையில் 2 பேர் பரிதாபமாக பலி..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதுமே ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று மாலை தொடங்கிய மழை தற்போது வரை தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது. இதனால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி வருகின்றன. அவற்றை உடனடியாக அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் காலை வரையிலான 12 மணி நேரத்தில் சராசரியாக 98 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 25 செ.மீ மழையும், ஆவடியில் 19 செ.மீட்டரும், கொளத்தூரில் 15 செம்.மீட்டரும், திருவிக நகரில் 15.4 செ.மீட்டரும், அம்பத்தூர் மற்றும் பொன்னேரியில் 14 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மழை விட்ட சில மணி நேரங்களிலேயே சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்துவிடுகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னையில் 2 பேர் உயிரிழந்திருப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை அசோக் நகரில் செல்போன் பேசியபடி சாலையில் நடந்து சென்ற நபர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது செல்போன் கருகியிருந்தபடியால் அவர் மின்சாரம் தாக்கி அல்லது மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்பு அனிப் என்பவர், தி.நகர் மின்கம்பம் அருகே மழைக்கு ஒதுங்கி நின்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அப்புவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.