1. Home
  2. தமிழ்நாடு

இரும்பு கேட் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு... வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது நேர்ந்த துயரம்!

சிறுமி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் இரும்பு கேட் மற்றும் தூண் சரிந்து விழுந்ததில், பெண் காவலரின் மகள் மற்றும் அவரது உறவினர் சிறுமி என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிவகாசி அருகே கொங்கலாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் ராஜாமணி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு கவின் (11) என்ற மகனும், கமலிகா (6) என்ற மகளும் உள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், ராஜேஸ்வரியின் சகோதரியும் செவிலியருமான தனலட்சுமி, தனது குழந்தைகளுடன் சிவகாசியில் உள்ள ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்துள்ளார்.

ராஜேஸ்வரி பணிக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் குழந்தைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். ராஜேஸ்வரியின் மகள் கமலிகா (6) மற்றும் அவரது சகோதரி மகள் லசிகா (4) ஆகிய இருவரும் வீட்டின் முன்புறம் உள்ள பெரிய இரும்பு கேட்டில் ஏறி ஊஞ்சலாடி விளையாடிக் கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக, பாரம் தாங்காமல் கேட் பொருத்தப்பட்டிருந்த சிமெண்ட் சுவர் தூண் திடீரென இடிந்து சரிந்தது. தூணுடன் சேர்ந்து அந்த கனமான இரும்பு கேட் இரண்டு சிறுமிகள் மீதும் அப்படியே விழுந்தது.

இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த இரண்டு சிறுமிகளும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும், சிறுமிகளை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் உயிர் பிரிந்திருந்தது. இது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சிறுமிகளின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் விடுமுறை நாளில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியையே கண்ணீர் கடலில் மூழ்கடித்துள்ளது.

Trending News

Latest News

You May Like