1. Home
  2. தமிழ்நாடு

2 கைகளையும் இழந்த நிலையில் 437 மதிப்பெண்கள் எடுத்த மாணவருக்கு அரசு உறுதுணையாக இருக்கும்- மு.க.ஸ்டாலின்..!!


கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு க்ரித்தி வர்மா என்ற மகன் உள்ளார். மகன் க்ரித்தி வர்மா நான்கு வயது இருக்கும் பொழுது வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டை ஒட்டியவாறு மின்கம்பத்திலிருந்து சென்ற மின் கம்பியை பிடித்துள்ளார். அப்பொழுது மின்சாரம் தாக்கி க்ரித்தி வர்மா தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார்.

மகனின் இந்த நிலையை கண்ட அருள்மூர்த்தி வீட்டை விட்டு சென்ற நிலையில், சோக்காடி கிராமத்தில் எந்தவித ஆதரவும் இல்லாததால் கஸ்தூரி தனது இரண்டு கைகள் இல்லாத மகனுடன் தனது சொந்த ஊரான ஜீனூர் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்து வருகிறார். இரண்டு கைகளும் இல்லை என்றாலும் தன்னம்பிக்கையை கைவிடாத க்ரித்தி வர்மா எட்டாம் வகுப்பு வரை மிக நன்றாக படித்ததுடன், ஓவியம் வரைதல், தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்வது என தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துள்ளார்.


2 கைகளையும் இழந்த நிலையில் 437 மதிப்பெண்கள் எடுத்த மாணவருக்கு அரசு உறுதுணையாக இருக்கும்- மு.க.ஸ்டாலின்..!!


இதனை பார்த்து ஆச்சரியமடைந்த இவரது ஆசிரியர் ஆனந்தி, க்ரித்தி வர்மாவை நெடுமருதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்ததுடன் அவருக்கு தேவையான உதவிகளை செய்தார். இந்த நிலையில் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் க்ரித்தி வர்மா, 437 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டு கைகளும் இல்லை, தந்தை ஆதரவும் இல்லை இருந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாத க்ரித்தி வர்மா சிறப்பாக பயின்று பள்ளியளவில் முதலிடம் பிடித்துள்ள சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

“தன் மகனுக்கு அரசு உதவ வேண்டும் எனவும், அவனுக்கு கைகள் பொருத்தி நம்பிக்'கை' தந்தால், என் வாழ்க்கையில் நான் வெற்றி அடைந்த மாதிரி" என கணவனின்றி வாழும் க்ரித்தி வர்மாவின் தாய் கஸ்தூரி கண்ணீருடன் பேட்டி அளித்திருந்தார்.

இதுதொடர்பான செய்தியை டிவிட்டரில் பார்த்தது மட்டுமின்றி, அதற்கு பதில் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இன்று வெளிவந்துள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது.

மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள் அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன். அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்” என உறுதி அளித்துள்ளார்.




Trending News

Latest News

You May Like