பட்டாசு குடோனில் விபத்து – 2 பேர் உயிரிழப்பு!!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரம் அருகே நாகராசம்பட்டியில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் பட்டாசு தயாரிக்கும்போது எதிர்பாராத விதமாகத் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து குடோனில் இருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. இதில் குடோனில் பணியாற்றி வந்த பழனியம்மாள் மற்றும் முனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த சிவசக்தி என்ற பெண் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து பென்னாகரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இவர் நிவாரணமும் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் ரூபாய் நிவராணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல் காயம் அடைந்தவருக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
newstm.in