சூப்பர்! இனி 2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ!!
சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 2 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள், மாதவரம்- சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், பூந்தமல்லி - விவேகானந்தர் இல்லம் என மூன்று வழித்தடங்களில் மொத்தம் 118 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வருகின்றன.
118 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணியில் 128 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் டௌடன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி, செயின்ட் ஜோசப் கல்லூரி ரயில் நிலையம் என 6 ரயில் நிலையங்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது.
இதன்மூலம் திட்டப் பணிக்கான செலவில் ரூ.1,200 கோடி வரை குறையும் என மெட்ரோ அதிகாரிகள் கணித்துள்ளனர். இந்நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2-ம் கட்டத்தில் 138 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களும் இயக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பெட்டி எண்ணிக்கையை உயர்த்த நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில் ரயில் சேவைகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மெட்ரோவில் பயணம் செய்யும் பொதுமக்கள் வேலைக்கு எளிதாகவும் விரைவாக செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, முதல் கட்ட மெட்ரோ ரயில் கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை இரு வழித்தடங்களில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
newstm.in