1. Home
  2. தமிழ்நாடு

நாளை முதல் பால், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்கிறது..!


அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல, தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. ஹோட்டல்கள், டீக்கடைகள் போன்றவற்றுக்கு தனியார் பால் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆவின் பாலுக்கும், தனியார் பாலுக்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால் ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. கடந்த ஆண்டு 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது. கொள்முதல் விலை உயர்த்தப்படாத நிலையில் விற்பனை விலையை மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா ஆகியவை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பால் விலையை உயர்த்தின. இந்நிலையில் தற்போது பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு நாளை (20-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து தனியார் பால் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் பால் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.


அதன்படி பால் விலை 3 வகையாக பிரித்து உயர்த்தப்பட்டுள்ளது. சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.50-ல் இருந்து ரூ.52 ஆக உயருகிறது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.62-ல் இருந்து ரூ.64 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like