+2 தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு..!!
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களை விடுமுறை நாட்களில் கல்வி சுற்றுலாவாக சென்னை ஐ.ஐ.டி., பெங்களூர் ஐ.ஐ.எம், டெல்லி பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்றும், இதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல 12-ம் வகுப்பில் 100 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வில் ஒரு பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. அது ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வரவும், நாள் முழுவதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கவும், முதல் பாட வேளையின் போது 10 நிமிடம் தினமும் மகிழ்ச்சியான வகுப்புகள் நடத்தப்படும். இந்த வகுப்பில் மாணவர்களுக்கு நன்னெறி பண்புகள் கற்பிக்கப்படும். மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வருடத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடத்தப்படும். 10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் அவர்களின் எதிர்கால கல்வி, வேலைவாய்ப்பினை பற்றி வழிகாட்டும் விதமாக துறை சார்ந்த வல்லுனர்கள், முன்னாள் மாணவர்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.
சென்னை பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்கள் டியூசன் செல்லாமல் அவர்களுக்கு புகழ்பெற்ற ஆசிரியர்கள் மூலம் இணையதளம் வழியாக நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கற்றல் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.