நெல்லையப்பர் கோவில் அருகே 18 வயது இளம்பெண் படுகொலை..!

திருநெல்வேலி உள்ள திருப்பணிகரிசல்குளத்தைம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சந்தியா (18). இவர் நெல்லையப்பர் கோவிலுக்கு அருகே உள்ள டவுன் கீழ ரத வீதியில் அழகு நிலைய பொருள் விற்பனை கடையில் பணியாற்றி வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மேல்படிப்பை தவிர்த்துவிட்டு சந்தியா பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வழக்கம்போல் இன்று காலை பணிக்கு வந்த சந்தியா, மதிய நேரத்தில் கடையில் இருந்து அருகில் உள்ள குடோனுக்கு பொருட்கள் எடுக்கச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் சந்தியாவை பின்தொடர்ந்து சென்றுள்ளார். சந்தியா கடைக்குள் சென்ற நிலையில் திடீரென கடைக்குள் புகுந்த அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தனது இருசக்கரத்தில் ஏறி தப்பியுள்ளார். இந்த தாக்குதலில் இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டவுன் போலீசார், இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கிடையே விசாரணையில், காதலிக்க மறுத்ததால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளியை அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில் அருகே பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.