இன்னும் 18 தமிழர்கள் இஸ்ரேலில் இருந்து வரவேண்டியுள்ளது : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்..!
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போா் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக அரசின் சாா்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. அங்கு 128 தமிழா்கள் இருப்பது அறியப்பட்டது. அவா்களில் முதல்கட்டமாக, 21 போ் வெள்ளிக்கிழமை தமிழகம் வந்தடைந்தனா்.
2-ம் கட்டமாக மதுரை, திண்டுக்கல், கரூா், தென்காசி, தருமபுரி, திருப்பூா், திருவண்ணாமலை, திருச்சி, சென்னை, விழுப்புரம், திருப்பத்தூா், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 28 தமிழா்கள், இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக சனிக்கிழமை காலை டெல்லி வந்தடைந்தனா்.
அதன்பிறகு, தமிழ்நாடு அரசு மூலம் அனைவரும் சென்னை மற்றும் கோவைக்கு சென்று சோ்ந்தனா். சென்னை விமான நிலையத்துக்கு 16 பேரும், கோவைக்கு 12 பேரும் சென்றனர். பின்னா் அவா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஆபரேஷன் அஜய் திட்டத்தின் ஒரு பகுதியாக, போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் சிக்கித் தவித்த 274 இந்தியர்கள் 4 -வது சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை டெல்லி வந்தடைந்தனா். டெல்லி வந்த இந்தியர்களில் 27 தமிழர்கள் 3 -ம் கட்டமாக நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்த 27 தமிழா்களை அரசின் சாா்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இஸ்ரேலில் இருந்து 110 பேர் இதுவரை தமிழகம் வந்துள்ளனர். இன்னும் 18 பேர் வரவேண்டியுள்ளது. அவகளையும் மீட்டு அழைத்து வரும் நடவடிக்கைகள் தொடரும். இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரம் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. 95 சதவிகிதம் பேர் மேற்படிப்புகளுக்காக இஸ்ரேல் சென்றுள்ளனர். வெளிநாடு செல்லும் தமிழர்களின் தரவுகளை உள்ளடக்கிய இணையதளத்தை தொடங்க உள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.