காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணை படுகொலை செய்த 17 வயது சிறுவன்..!
நெல்லை கீழரத வீதியில் பேன்சி ஸ்டோரில் பணிபுரிந்த சந்தியா என்ற 18 வயது பெண்ணை பட்டப்பகலில் மர்மநபர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலைச் செய்தார். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே கடையில் பணிபுரிந்து வந்த 17 வயதான சிறுவன், ஒருதலைப்பட்சமாக காதலித்துள்ளார்.
ஆனால், சந்தியா அதனை ஏற்கவில்லை. இதனையறிந்த கடையின் உரிமையாளர் அந்த சிறுவனை பணி நீக்கம் செய்துள்ளார். இதன் காரணமாக, கோபமடைந்த சிறுவன் பணியில் இருந்த சந்தியாவைப் பின் தொடர்ந்து, கொலை செய்தது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே, பெண்ணின் உறவினர்கள், நெல்லை டவுனில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை ஆணையர் சரவணகுமார், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.