போதை உயிரைக் கொல்லும் - போதை ஊசியினால் 17 வயது சிறுவன் பலி..!
சென்னையை சேர்ந்த 17 வயது சிறுவன், ஆறு மாதங்களாக எலக்ட்ரீஷியன் ஹெல்பராக பணிபுரிந்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் மாலை மண்ணடி பிளாட்பாரத்தில் வசிக்கும், தன் 17 வயது நண்பரது வீட்டில், நண்பர்களான காசிப், வினோத், அபினேஷ் ஆகியோருடன் சேர்ந்து, போதை ஊசியை உடம்பில் செலுத்தி உள்ளார்.
பின், வீட்டை விட்டு வெளியே வந்த அவர், வாந்தியெடுத்து மயங்கி விழுந்துள்ளார். உடனே, நண்பர்கள் சிறுவனை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ந்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, போலீஸார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது, அந்தச் சிறுவனின் உடையில் போதை ஊசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார், வழக்குப்பதிவு செய்து சிறுவனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப் பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை சாடி வரும் நிலையில், போதை ஊசி செலுத்தி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது.