ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,700 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஆட்டிறைச்சி, ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுவது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், ஜெய்ப்பூர் வழியாக வரும் பிக்கானீர் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தை அடைந்தவுடன் ரயிலில் ஏறி சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமாக ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,700 கிலோ ஆட்டிறைச்சி அடங்கிய 26 தெர்மகோல் பெட்டிகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சமாகும். பின்னர் இவற்றிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதல்கட்ட விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் சிக்கந்தர் எனும் ஊரில் இந்த ஆட்டிறைச்சியை தெர்மகோல் பெட்டிகளில் அடைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து 250 கிமீ தொலைவில் உள்ள ஜெய்ப்பூர் ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆடு வெட்டப்பட்டதில் இருந்து இன்றுவரை என 4 நாட்களுக்கும் மேலாக ரயில் பயணத்தில் ஆட்டிறைச்சி சுகாதாரமற்று வைக்கப்பட்டிருக்கிறது.
முறையான பதப்படுத்தும் உபகரணங்களின்றி இவ்வளவு நாட்கள் இறைச்சியை வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது கெட்டுபோய்விடும். இந்த இறைச்சிகளை சென்னையில் உள்ள பல கடைகளுக்கு விநியோகிப்பதற்காக உரிய மருத்துவ சான்றிதழ்கள் இன்றி கொண்டு வந்துள்ளனர்.
இவை எந்தெந்த கடைகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது, இவற்றை வரவழைத்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன இறைச்சிகள் அனைத்தும் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையாக அழிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மதுரை செல்லும் இந்த ரயிலில் மேலும் பல இறைச்சிப் பெட்டிகள் உள்ளன. அவை அடுத்தடுத்த மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் கைப்பற்றவும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.