களத்தில் இறங்கிய அதிகாரிகள் - 17 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம்..!
தமிழகம் முழுவதும் நுகர் பொருள் வாணிபக் கழகம் சார்பில் அரசு மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் காஞ்சிபுரத்தில் 131 கடைகளும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 89 என மொத்தம் 220 கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களில் க்யூ ஆர் கோட் பதிவு செய்யப்பட்டு பில்லிங் செய்த பின்பே மது பிரியர்களுக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த நிலையில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட அதே ரூ 150 விலைக்கே மதுபானம் விற்க்கப்பட்டது எனவும் அதற்கான பில் 140 என குறிப்பிட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் மது பிரியர்கள் அனைவரும் எத்தனை மாற்றங்கள் அரசு மதுபான கடைகளில் செய்தாலும் கூடுதலாக பணம் பெறுவது என்பது மாற்ற இயலாது என குற்றம் சாட்டினர்.
கடந்த மாதம் அரசு மதுபானம் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டால் அக்கடையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் கூடுதலாக பணம் பெற்றுக் கொண்டு மதுபானங்கள் விற்பனை செய்து வந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் ஜெம் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடையில் பணிபுரிந்த இரண்டு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஐந்து விற்பனையாளர்கள் மற்றும் ஊத்துக்காடு பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடையில் பணியாற்றிய இரண்டு மேற்பார்வையாளர்கள் மற்றும் எட்டு விற்பனையாளர்கள் என ஒட்டுமொத்தமாக 17 அரசு மதுபான கடை ஊழியர்கள் அதிரடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மார்க் மேலாளரும் அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு தற்போது பெண் ஒருவர் அப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளார் ஊழியர்களிடையே கலக்கமும், மது பிரியர்களிடையே வரவேற்பும் பெற்றுள்ளது.