16 வயது சிறுமி கர்ப்பம்.. வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என பெற்றோர் செய்த செயலால் மாணவி உயிரிழப்பு..!
திருப்பூர் மாவட்டம் நல்லூர் முத்தணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், யாருக்கும் தெரியாமல் கருகலைப்பு செய்ய முடிவு செய்தனர். இதற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், அருகில் இருந்த மருந்துக் கடையில் எந்த ஒரு மருத்துவரின் பரிந்துரை சீட்டும் இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்துள்ளனர்.
இந்த மாத்திரையை சப்பிட்ட சிறுமிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து, கடுமையான வயிற்று வலியில் துடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி கடும் வயிற்று வலியால் கடந்த 27ம் தேதி உயிரிழந்தார்.
இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், முத்தணம்பாளையம் சாலையில் உள்ள மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து தேசிய மருத்துவ திட்ட, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, மாநகர நகர் நல அலுவலர் கெளரிசரவணன், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) கெளரி, மருத்துவ துறை இணைஇயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகோபலகிருஷ்ணன் மற்றும் குழுவினர் அங்கு திடீர் ஆய்வு நடத்தினர்.
மாவட்ட மருந்துகள் ஆய்வாளர்கள் ராமசாமி, மஹாலட்சுமி, உமாமகேஸ்வரி தலைமையிலான குழுவினர் மருந்தகத்தில் விற்கப்படும் மருந்துகள், இருப்பில் வைக்கப்பட்டுள்ள மருந்துகள் குறித்து ஆய்வு செய்தனர். முறைகேடாக மருந்துகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். 16 வயது சிறுமி கர்ப்பமடைந்தது எவ்வாறு? இதற்கு காரணமான நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.