சென்னையில் 16 வயது சிறுமியை கொலை செய்துவிட்டு துர்நாற்றத்தை தடுக்க ஊதுபத்தி வைத்த கொடூரம்..!
சென்னை அமைந்தகரை மேத்தாநகர் சதாசிவம் தெருவில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வருபவர் முகமது நவாஸ். இவரது மனைவி பெயர் நபியா. இவர்கள் வீட்டில் தஞ்சாவூரை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டார்.குடும்ப சூழல் காரணமாக சிறுமி சென்னையில் தங்கி முகமது நவாஸ் வீட்டில் தங்கி வீட்டு வேலை செய்து வந்தார். ஓராண்டுக்கு மேலாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அடுக்குமாடி குடியிருப்பு பூட்டி கிடந்துள்ளது. சிறுமியும் மாயமாகி உள்ளார். இதுபற்றி வழக்கறிஞர் ஒருவர் அமைந்தகரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வந்து வீட்டை சோதனையிட்டனர். அப்போது வீட்டின் கழிவறையில் மர்ம முறையில் சிறுமி பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன.
அயன்பாக்ஸ் சூடு மற்றும் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட காயங்கள் இருந்தன. இதனால் அவர் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து சிறுமியின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பின் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த நவாஸ் - நபியா தம்பதியை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இந்த விசாரணையின்போது தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது சிறுமியை முகமது நவாஸ் தனது மனைவி நபியாவுடன் சேர்ந்து அடிக்கடி சித்ரவதை செய்து வந்துள்ளார். மேலும் வீட்டுக்கு செல்ல விடாமல் ஓராண்டுக்கு மேலாக வீட்டில் வேலை வாங்கி உள்ளார். தீபாவளி தினத்தில் சிறுமி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் முகமது நவாஸ், நபியாவுடன் நண்பர் லோகேசும் இருந்துள்ளார்.
அப்போது சிறுமி சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி கோபத்தில் அவர்கள் தாக்கி உள்ளனர். இதில் சிறுமி மயங்கி விழுந்துள்ளார். மீண்டும் சிறுமியை கண்விழிக்க வைக்க 3 பேரும் முயன்றனர். ஆனால் சிறுமி இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த 3 பேரும் கொலையை மறைக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி சிறுமியின் உடலை கழிவறையில் வீசியுள்ளனர். சிறுமி கழிவறையில் தவறி விழுந்து இறந்ததாக கதை கட்ட திட்டமிட்டுள்ளனர். இருப்பினும் உடனடியாக சிறுமியின் உடலில் இருந்து துர்நாற்றம் வந்துவிடுமோ என்று அவர்கள் பயந்துள்ளனர். இதனால் வீடு முழுவதும் ஊதுபத்தியினை கொளுத்தி வைத்துவிட்டு உறவினரின் வீட்டுக்கு தப்பி சென்றுவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. தற்போது இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே முகமது நவாஸ், நபியா தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.