ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை..!
பஞ்சாப் மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். கடந்த 11-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அந்தச் சிறுமி டெல்லி வழியாக மீண்டும் மொராதாபாத் பகுதிக்கு வந்துள்ளார்.
பின்னர் மொராதாபாத்திலிருந்து மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு அதிகாலை 2.30 மணியளவில் வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி பஸ்சில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட கும்பல் அந்தச் சிறுமியைக் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் 13-ந் தேதி அதிகாலையில் சிறுமியைப் பஸ்சிலிருந்து கீழே இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
கொட்வளி படேல் நகர் போலீஸ் சோதனைச்சாவடி அருகே அலங்லோலமான நிலையில் தவித்துக் கொண்டிருந்த சிறுமியைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இதுபற்றிச் சிறுவர்கள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறுவர் நல காப்பக குழுவினர் அந்தச் சிறுமியை மீட்டு உரிய சிகிச்சை அளித்தனர். முதலில் அந்தச் சிறுமி எதுவும் பேசாமல் இருந்தார்.
இதையடுத்து அவருக்குரிய கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமைகுறித்து அந்தச் சிறுமி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குழுந்தைகள் நல காப்பக குழுவினர் இதுபற்றி ஐ.எஸ்.பி.டி. போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்தச் சிறுமி பஞ்சாப்பிலிருந்து டெல்லி சென்று விட்டுப் பின்னர் மொராதாபாத் திரும்பி உள்ளார். வழியில் டேராடூன் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்சில் 5 பேர் கொண்ட கும்பல் அவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய போலீசார் பஸ் டிரைவர் தர்மேந்திரகுமார் (வயது 32), கண்டக்டர் தேவேந்திரகுமார் (52), டிக்கெட் கவுண்டர் காசாளர் ராஜேஸ்குமார் சோன்கர் (38), மற்றும் தற்காலிக டிரைவர்கள் ரவிக்குமார் (34) ராஜ்பால் சிங் (57) ஆகிய 5 பேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் குற்றத்திற்கு பயன்படுத்திய பஸ்சை போலீசார் பறிமுதல் செய்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக டேராடூன் போலீஸ் அதிகாரி அஜய்சிங் கூறுகையில், அந்தச் சிறுமி மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் முதலில் சரியான தகவல்களைக் கூறவில்லை. ஒரு முறை தான் மொராதாபாத்தை சேர்ந்தவள் என்றும், மறுமுறை பாட்டியாலாவை சேர்ந்தவள் என்றும் கூறினார். மறுநாள் அந்தச் சிறுமிக்குக் கவுன்சிலிங் அளிக்கப்பட்ட போதுதான் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறினார்.
தொடர்ந்து பெண் அதிகாரிகள்மூலம் சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அவரிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடந்தது. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளைக் கைப்பற்றி நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.