தமிழகத்தை உலுக்கிய சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை..!
கடந்த 2019ம் ஆண்டில் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தில் 7 மற்றும் 9 வயது சகோதரிகளை மிரட்டி தாத்தா, சித்தப்பா உள்ளிட்ட உறவினர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததில் ஒரு சிறுமி உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கில் சிறுமிகளின் உறவினர்கள் துரைராஜ், அருண், மகேஷ் , தீனதயாளன், அஜித்குமார், பிரபா, பிரசாந்த், ரவிக்குமார் உள்ளிட்ட 15 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 37 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது விழுப்புரம் போக்சோ நீதிமன்றம்.
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அடுத்த தென்நற்குணம் கிராமத்தைச் சேர்ந்த அந்தப்பெண் தாய்மாமனை திருமணம் செய்துகொண்டதில் 2 பெண் குழந்தைகள் பிறந்தனர். கணவர் தன்னுடன் வயதில் மூத்தவர் என்பதால் இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
குழந்தைகளை புதுச்சேரியில் உள்ள தனது தாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு, வேலைக்கு சென்றுவந்தார் அந்தப்பெண். வேலை செய்த இடத்தில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் தனிக்குடித்தனம் நடத்த ஆரம்பித்தார்.
புதுச்சேரியில் பள்ளியில் படித்து வந்த அப்பெண்ணின் 9வயது மூத்த மகள் மயங்கி விழுந்தார். அவரது 7வயது சகோதரியும் சோர்வாக இருந்ததால் பள்ளி நிர்வாகம் விசாரித்தபோதுதான் அந்த கொடுமை வெளியே தெரியவந்தது.
50 வயது முதல் 21 வயது வரைக்கும் உள்ள சித்தப்பா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட உறவினர்களால் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வந்த தகவலை கேட்டு அதிர்ந்தது பள்ளி நிர்வாகம்.
சம்பவம் நடந்தது விழுப்புரம் மாவட்டம் என்பதால் புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுவுக்கு பரிந்துரை செய்ய, பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணயை அடுத்து சிறுமிகளின் தாத்தா துரை(50), சித்தப்பாக்கள் ரமேஷ் (30), மகேஷ் (30) மற்றும் உறவினர்கள் பிரபாகரன் (23), ரவிக்குமார்(23), அருண்குமார்(24), தீனதயாளன்(24), பிரசாந்த்(20), மோகன்(25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிறுமிகளின் தாய்மாமனும் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.
போக்சோல் வழக்கில் இவர்கள் கைதானபோதிலும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இதற்கிடையில் மகள்களின் எதிர்காலம் கருதி, அவர்களை அழைத்துக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்து வீட்டு வேலைகள் செய்து மகள்களை காத்து வந்தார் அப்பெண். அதில் 13.2.2020 அன்று இளையமகள் 7 வயது சிறுமிக்கு திடீரென்று வாந்தி எடுத்ததால், அவரை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில்தான் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறுமியின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அப்போது தெரிவித்திருந்தனர்.
இந்த வன்கொடுமை வழக்கில் 15 பேருக்கு இன்று விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தண்டனை வழங்கி இருக்கிறது.