1. Home
  2. தமிழ்நாடு

நம்மாழ்வார் நினைவு நாளில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடவு..!

1

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளில் தமிழகம் முழுவதும் இன்று (30/12/2024) 1,50,084 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக நடப்பட்டது. இப்பணியில் விவசாயிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் பெருமளவில் ஈடுபட்டனர்.

நம்மாழ்வார் அவர்கள் பாரம்பரிய இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் மிகத் தீவிரமாக களத்தில் செயல்பட்டவர். விவசாயிகள் மத்தியில் பாரம்பரிய பயிர் ரகங்களை பாதுகாத்தல், மண்வளத்தை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தினார். நம்மாழ்வார் அவர்கள் கொடுத்த ஊக்கத்தாலும், எழுச்சியினாலும் எண்ணற்ற விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறினர்.

நம்மாழ்வார் அவர்களின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை நினைவு கூறும் வகையில் அவரின் நினைவுநாளில் காவேரி கூக்குரல் இயக்கம் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறது. அதன்படி இந்தாண்டு நினைவு நாளில் தமிழகம் முழுவதும் 570 ஏக்கர் பரப்பளவு கொண்ட, 65 விவசாயிகளின் நிலங்களில் மொத்தம் 1,50,084 மரக்கன்றுகள் இவ்வியக்கம் மூலம் நடவு செய்யப்பட்டு உள்ளது.

நம்மாழ்வார் அவர்கள் ஈஷா யோக மையத்தின் செயல்பாடுகளின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். ஈஷா மேற்கொண்ட சுற்றுச்சூழல் பணிகளுக்கு ஆரம்ப காலத்தில் உறுதுணையாக இருந்து தேவையான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை அவர் வழங்கியுள்ளார். அவரது நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் ஈஷாவின் சுற்றுச்சூழல் திட்டங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காவேரி கூக்குரல் இயக்கம் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு நாட்களில் மரம் நடும் விழாக்களை நடத்தி வருகிறது. குறிப்பாக நம்மாழ்வார், மரம் தங்கசாமி, நெல் ஜெயராமன் ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களிலும், உலக சுற்றுச்சூழல் தினம், காந்தி ஜெயந்தி, வன மகோத்சவம் உள்ளிட்ட நாட்களிலும் தமிழகம் முழுவதும் மாபெரும் மரம் நடும் விழாக்களை நடத்தி விவசாயிகளின் நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை, காவேரி கூக்குரல் இயக்கம் தொடர்ந்து செய்து வருகிறது.

ஈஷா மூலமாக இதுவரை தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 12 கோடி மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் விவசாய நிலங்களில் 1,01,42,331 மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் 1.21 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 98 லட்சத்திற்கு மேற்பட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களின் நிலங்களில் வழக்கமாக சாகுபடி செய்யும் மற்ற பயிர்களோடு மரங்களை வளர்க்கும் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறுவதால் அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. மரங்களுடன் ஊடுபயிராக மஞ்சள், வாழை, மிளகு, ஜாதிக்காய், அவகோடா மற்றும் வாசனை பயிர்களை சாகுபடி செய்வதின் மூலம் தொடர் வருமானம் பெற முடியும்.

இதற்காக காவேரி கூக்குரல் இயக்கம் பல்வேறு பயிற்சி கருத்தரங்குகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. இதில் வேளாண் விஞ்ஞானிகள், முன்னோடி விவசாயிகள், துறைசார் வல்லுனர்கள் பலர் பங்கேற்று விவசாயிகளுக்கு பயிற்சிகளை வழங்குகின்றனர்.மேலும் விவசாயிகள் அவர்களின் ஊருக்கு அருகிலேயே நாற்றுகளை பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஈஷா நாற்றுப்பண்ணைகள் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு டிம்பர் மரங்கள் மானிய விலையில் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

பழமரங்கள், நிழல்மரங்கள், பூமரங்கள் போன்றவை பொதுமக்களுக்காக 7 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான காவேரி கூக்குரல் பணியாளர்கள், மரவிவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளின் நிலங்களை நேரடியாக பார்வையிட்டு மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். நாற்றுகளை பெறுவதற்கும், இலவச ஆலோசனைகளை பெறுவதற்கும் 80009 80009 என்ற காவேரி கூக்குரல் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.


 

Trending News

Latest News

You May Like