நாக்பூரில் தொழிற்சாலை வெடிவிபத்தில் 15 பேர் பலி; 18 பேர் படுகாயம்!
நாக்பூரில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 15 பேர் பலியாகி உள்ளனர். நாக்பூர் மாவட்டம் கட்டோல் தாலுகாவிற்கு உட்பட்ட ரவுல்கான் பகுதியில் இயங்கி வரும் தனியார் வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று காலை 10 மணியளவில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. தொழிற்சாலையின் பேக்கேஜிங் பிரிவில் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிப்பில் 15 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 18-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
தொழிற்சாலையில் வெடிமருந்துகளைக் கையாளும் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக விபத்து நேரிட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தடய அறிவியல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிரா அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இதே போன்ற வெடிபொருள் உற்பத்தி நிறுவனங்களில் கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவது தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. தொழிற்சாலைகளில் பாதுகாப்புத் தணிக்கைகள் முறையாக நடத்தப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.