14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் : குற்றஞ்சாட்டப்பட்ட நபர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
அசாம் மாநில நாகோன் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். சிறுமி மாலை நேர பயிற்சி வகுப்புக்குச் சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு 8.30 மணியளவில் அந்தக் கும்பல் அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.
மேலும், வன்கொடுமை சம்பவத்துக்குப் பின்னர் அந்தச் சிறுமியை அவர்கள் சாலையோரம் வீசிச் சென்றுள்ளனர். காயங்களுடன் மயங்கிய நிலையில் ஒரு குளக்கரையில் இருந்து அந்தச் சிறுமி மீட்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அதன்படி, தபாசுல் இஸ்லாம் என்ற நபர் முதன்மை சந்தேக நபராக கண்டறியப்பட்டார். அவரை நேற்று (வெள்ளிக்கிழமை) நாகோன் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் போலீஸார் அந்த நபரை குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவரிடம் குற்றச் சம்பவத்தை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர். முன்னெச்சரிக்கையாக அந்த நபருக்கு கைவிலங்கும் இட்டிருந்தனர். அப்போது அந்த நபர் யாரும் எதிர்பார்க்காத வேளையில் திடீரென குளத்தில் பாய்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணி நடந்தது. சுமார் 2 மணி நேரத்துக்குப் பின்னர் அந்த நபரின் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஞ்சியுள்ள இரண்டு குற்றவாளிகளுக்கு போலீஸார் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று ஊர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் ஹேமந்த் பிஸ்வ சர்மா, “நான் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். எங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடக்கிறதோ, அங்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசு உரிய நடவடிக்கை எடுக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். அரசாங்கம் மெத்தனமாக இருப்பதை உணரும்போதுதான் மக்கள் வெகுண்டெழுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது அரசாங்கம் மிக மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேற்கு வங்க அரசு அத்தகைய நடவடிக்கையை எடுக்காததாலேயே மக்கள் கோபமடைந்தனர். ஆனால் இங்கே திங் பகுதியில் இந்து சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமையில் தொடர்புடையவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.