தூங்கிக் கொண்டிருந்த தாயை கல்லால் அடித்து கொலை செய்த 14 வயது சிறுவன்..!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சுங்கக்காரன்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் அருள்செல்வன். இவரது மனைவி யுவராணி. இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், தர்ஷினி ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். யுவராணி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் சஞ்சய் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகின்றார். மகள் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் பள்ளி விடுதியில் இருந்து வீட்டுக்கு வந்த மகன் நேற்று இரவு 8 மணி அளவில் விடுதிக்கு செல்ல மாட்டேன் என கூறி தாயார் யுவராணி இடம் சண்டைபோட்டு உள்ளார். தாயார் யுவராணி காலை அப்பா வந்ததும் பள்ளிக்கு செல்லலாம் என கூறி சமாதானம் செய்து உள்ளார். இதன்பின் தாயும் மகனும் சமாதானமாகி தூங்க சென்றுள்ளனர்.
இதையடுத்து நள்ளிரவில் வீட்டில் யுவராணி, மகன் சஞ்சய், மகள் தர்ஷினி ஸ்ரீ மூன்று பேரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சஞ்சய், தாய் மீது இருந்த ஆத்திரத்தில் வீடு கட்ட பயன்படுத்தப்படும் ஹாலோ பிளாக் கல்லை எடுத்துவந்து தூங்கிக் கொண்டிருந்த தாய் யுவராணியின் தலையில் போட்டுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்போது அவரது மகள் தர்ஷினி ஸ்ரீ சத்தம் போடவே சஞ்சய் வீட்டை விட்டு ஓடி தலைமறைவானார். இது குறித்து அவர்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் மற்றும் சத்தியமங்கலம் டிஎஸ்பி சந்திரசேகரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் யுவராணி உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சிறுவன் சஞ்சயை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.