135000000 இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் - மோடி..!
நிதி ஆயோக் அறிக்கையின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் 13.5 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டிருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச அரசுப் பணி நியமன விழாவில் காணொளி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றிய மோடி இதனைத் தெரிவித்தார்.
நிதி ஆயோக் அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் வறுமைக் கோட்டின் கீழ் இருந்து 13.5 கோடி மக்கள் விடுபட்டிருக்கிறார்கள். வருமான வரி கணக்கு தாக்கலை அடிப்படையாகக் கொண்ட வருமான வரி அறிக்கை, கடந்த 9 ஆண்டுகளில் மக்களின் சராசரி வருவாய் உயர்ந்திருப்பதாகக் கூறுகிறது.
2014ல் ரூ.4 லட்சமாக இருந்த சராசரி ஆண்டு வருவாய், 2023ல் ரூ.13 லட்சமாக உயர்ந்திருக்கிறது. குறைந்த வருவாய் பிரிவில் இருந்து உயர் வருவாய் பிரிவுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
மக்கள் தாமாக முன் வந்து வரி செலுத்தி வருகிறார்கள். அவ்வாறு வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை மிகப் பெரியது. அவர்கள் செலுத்தும் வரிப் பணம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று மோடி தெரிவித்தார்.