தமிழ்நாடு முழுவதும் 12,846 பஸ்கள் இயக்கம் : இன்று முதல் 3 நாட்கள் இயக்க ஏற்பாடு..!
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பஸ், ரயில்கள் மூலம் 13 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சென்னையில் மட்டும் சுமார் 1 கோடிக்கும் மேல் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர், பணி, தொழில் மற்றும் கல்விக்காக சென்னையை வாழ்விடமாக கொண்டுள்ளனர்.
சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள் பெரும்பாலானோர் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். இதுபோன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக வழக்கமாக இயக்கப்படும் 6 ஆயிரத்து 276 சிறப்பு பஸ்களுடன் கூடுதலாக 7 ஆயிரத்து 740 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 86 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில், சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பஸ் நிலையங்களில் இருந்து மட்டும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதலாக 4 ஆயிரத்து 900 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதன் மூலம் சென்னையில் இருந்து மட்டும் கடந்த 3 நாட்களில் சுமார் 5 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று இருக்கின்றனர். முதல் 2 நாட்களில் பெரும்பாலானோர் சென்னையில் இருந்து சென்றுவிட்டதால் தீபாவளி அன்று குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் பயணித்தனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக இன்று (நவம்பர் 2ம் தேதி ) முதல் நவ.4ஆம் தேதி வரை 12,846 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.