தமிழ்நாட்டில் 1,267 பேருக்கு இன்ஃப்ளூயென்சா காய்ச்சல் உறுதி!!
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஃப்ளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்1என்1 இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. பெரும்பாலான நகரங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழை, வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், இவற்றைத் தடுக்கும் வகையில் 1,000 இடங்களில் நேற்று காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளில் தேவைக்கேற்ப தொடர்ந்து நடைபெறும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சளி, தலைவலி, இருமல், காய்ச்சல் இப்படி எந்த அறிகுறிகள் இருந்தாலும் முகாம்களில் பரிசோதித்துக் கொள்ளும்படியும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
நேற்று வரை தமிழ்நாட்டில் 5,064 பேருக்கு காய்ச்சல் காரணமாக எச்1என்1 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,267 பேருக்கு இன்ஃப்ளுயென்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அதிக அளவு சோதனை கருவிகளை வாங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் 6,000 சோதனை கருவிகளை வாங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் வரும் 26-ம் தேதி திறக்கப்படும். டெண்டர் திறக்கப்பட்டு பணி ஆணை வழங்கியவுடன் 15 நாட்களின் அந்த நிறுவனங்கள் சோதனைக் கருவிகளை விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.