கொளுத்தும் வெயில் : திருப்பதியில் கட்டப்படும் 1162 தண்ணீர் தொட்டிகள்..!

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவானது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன. வரும் மாதங்களில் வெப்ப அலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வெப்ப அலையிலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகங்கள் முறையான வசதிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் திருப்பதி மாவட்ட நிர்வாகம் தண்ணீர் தொட்டிகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் (MGNREGA) கீழ் இதுபோன்ற நீர் தொட்டிகள் கட்டுவதற்கான 'பூமி பூஜை'யை திருப்பதி மாவட்ட ஆட்சியர் எஸ். வெங்கடேஸ்வர், மாவட்ட நீர் மேலாண்மை முகமை (DWMA) திட்ட இயக்குநர் ஸ்ரீனிவாச பிரசாத்துடன் இணைந்து தொடங்கி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய ஆட்சியர், மாவட்ட நிர்வாகங்கள் விலங்குகளுக்கு முறையான வசதிகள் மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சையை உறுதி செய்யும் என்றும், வெப்ப அலையிலிருந்து அவற்றைப் பாதுகாக்கும் என்றும் தெரிவித்தார். வரும் நாட்களில் வெப்ப அலை கடுமையாக இருக்கும் என்றும் கூறிய மாவட்ட ஆட்சியர் அதற்குள் தண்ணீர் தொட்டிகளை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் மாவட்டம் முழுவதும் கால்நடைகளின் நலனுக்காக 1,612 தண்ணீர் தொட்டிகள் ஒவ்வொன்றும் 33,200 ரூபாய் செலவில் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் ஆட்சியர் வெங்கடேஸ்வர் தெரிவித்தார். முழு செயல்முறையும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் என்றும் காலக்கெடுவிற்கு ஏற்ப செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர் தெரிவித்துள்ளார்.