வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு எதிராக 11 வழக்குகள் பதிவு..!
வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில், அரசு வேலைகளில் இடஒதுக்கீடு விவகாரம் வன்முறையாக வெடித்தது. இதற்கு எதிராக கடந்த ஜூலையில் தொடங்கிய மக்கள் போராட்டம் பல வாரங்களாக தொடர்ந்து நீடித்தது.
இந்த சூழலில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். இதனால் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசை அமைத்தது.
எனினும், வங்காளதேசத்தில் வன்முறையும், கலவரமும் தொடர்ந்ததில், பலி எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஷேக் ஹசீனா மற்றும் 33 பேருக்கு எதிராக படுகொலை குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்யும்படி அந்நாட்டு கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, 2013-ம் ஆண்டு மே 5-ந்தேதி மோதிஜீல் பகுதியில் ஷாப்லா சட்டார் என்ற இடத்தில் ஹிபாஜத்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு பேரணி ஒன்றை நடத்தியது.
இந்த பேரணியின்போது பெரிய அளவில் படுகொலை நடந்தது. முன்னறிவிப்பு எதுவுமின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.
இதுபற்றி வங்காளதேச மக்கள் கட்சியின் தலைவர் பபுல் சர்தார் சகாரி, டாக்கா பெருநகர கோர்ட்டின் நீதிபதி ஜகி-அல்-பராபியிடம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த படுகொலைக்கு ஹசீனா மற்றும் 33 பேர் பொறுப்பு என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில், சகாரியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறிய நீதிபதி அதன் மீது விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறியுள்ளார்.
இதனால், ஹசீனாவுக்கு எதிராக 11 வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில் 8 கொலை வழக்குகள், ஒரு கடத்தல் மற்றும் மனித குலத்திற்கு எதிரான மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக 2 வழக்குகளும் பதிவாகி உள்ளன.